பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்169

ஓவியங்கள்

ஓவியக்கலை ஒரு சிறந்த கலை. அதன் மூலம் மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்த முடியும். ஓவியங்களின் வாயிலாக மக்களிடம் ஒழுக்கத்தை வளர்க்க முடியும்; சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கல்விப் பயிற்சியும் கொடுக்க முடியும். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆகையால் அவர்கள் ஓவியக் கலையை வளர்த்து வந்தனர்.

இன்றும் பல கோயில்களிலே மண்டபங்களிலே பல ஓவியங்கள் தீட்டியிருப்பதைக் காண்கின்றோம். அவ்வோவியங்கள் பெரும்பாலும் புராண வரலாறுகளைக் குறிப்பனவாகவே யிருக்கின்றன. பண்டைக் காலத்திலும், மக்கள்கூடும் கோயில் மண்டபங்களிலே ஓவியந்தீட்டி வைக்கும் வழக்கம் இருந்தது. அக்காலத்து ஓவியங்களிலே தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளை நினைவூட்டும் ஓவியங்களும் இருந்தன; மக்களுக்கு அறிவூட்டும் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டும் ஓவியங்களும் இருந்தன; நல்லொழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை விளக்கும் ஓவியங்களும் எழுதப்பட்டிருந்தன. இவ்வுண்மையைப் பரிபாடலிலே பார்க்கலாம்.

‘‘சூரியனுடன் சேர்ந்து வருகின்ற சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை சக்கரவாள கிரியைக் சுற்றிவருவதைப் போல் எழுதப்பட்டுள்ள கிரகங்களின் காட்சியைக் காண்பர்; அக்காட்சியிலே ஈடுபட்டு நிற்பார்கள் சிலர்.

‘‘இரதியையும் மன்மதனையும் இணை பிரியாத நிலையிலே அமைத்து எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர்; கணவனுடன் சேர்ந்து செல்லும் பெண்கள் அதைக்