கூடலும் குன்றமும் பரிபாடற் காலத்திலே பரங்குன்றமும் மதுரையைப் போன்ற சிறந்த நகரமாக விளங்கிற்று. பலரும் மகிழ்ந்து வாழும் பரந்த நகரமாகவும் இருந்தது. இவ்விரண்டு நகரங்களும் செல்வச் சிறப்பில் ஒன்றுபட்டிருந்தது போலவே, தெய்வீகப் பெருமையிலும் ஒன்றுபட்டிருந்தன. இவ்வுண்மையை ஒரு பரிபாட்டின் பாடற் பகுதியிலே காணலாம். ‘‘இல்லோர்க்கு உதவி செய்யும் வள்ளல்களை ஏற்றிக் கொண்டாடும்; ஏற்பவர்களைக் கண்டாலும் இகழாது, மகிழ்ந்து வரவேற்று வாழ்வளிக்கும். இத்தகைய செல்வச் சிறப்புடைய அழகிய மதுரையிலும், செவ்வேள் குடியிருக்கும் பரங்குன்றத்திலும் வாழ்கின்றவர்களே உண்மையில் வாழ்கின்றவர்கள் என்று சொல்லப்படுவார்கள். இவர்களே தேவர்கள் வாழும் துறக்கத்தை யடைந்து இன்பந்துய்ப்பார்கள்; இவர்களைத் தவிர மற்ற நகரங்களிலே வாழ்கின்றவர்கள் துறக்கத்தையடைய மாட்டார்கள். ‘‘ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்துஉவக்கும் சேய்மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும், வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார் போவார் ஆர் புத்தேள் உலகு’’ இதனால் மதுரை, பரங்குன்று ஆகியவைகளின் செல்வச் சிறப்பையும், தெய்வீகத் தன்மையையும் காணலாம். ‘‘அறிவிலும் சரி, சண்டையிலும் சரி, போரிட்டுத் தோல்வி யடையாத கூடல் மா நகரம். புலத்தினும், போரினும் போர்தோலாக் கூடல்’’ (பா. 19) ஒப்பற்ற அறிவாளிகள் நிறைந்த மதுரை; தோல்வியடையாத போர் வீரர்கள் நிரம்பிய மதுரை; இவை இரண்டிலும் வெற்றிபெற்று விளங்கும் மதுரை; என்று மதுரையின் பெருமையை விளக்கிற்று இது. |