172 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பழக்க வழக்கங்கள் சங்ககாலத் தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த பல பழக்க வழக்கங்களைப் பரிபாடலிலே காணலாம். நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம், என்பவை, நூறு, ஆயிரம், பதினாயிரம், லட்சம், கோடி என்பவைகளைப்போல எண்களைக் குறித்து வந்தன. அவை ஒவ்வொன்றும் குறிக்கும் எண்கள் யாவை என்பதை இக்காலத்தில் அறிய முடியவில்லை. (பா. 2) சங்க காலத்தில் மதுவிலக்கு இல்லை. மக்கள் தாராளமாக மதுவருந்தி மகிழ்ந்தனர். செல்வர் வீட்டுப் பெண்கள் நீராடிய பின் மதுவருந்துவது வழக்கம். (பா. 7) நடனமாடும் பெண்களுக்கும் மதுவருந்தும் வழக்கம் உண்டு. (பா. 21) உறுதிமொழி கூறும்போது ஆணையிட்டுக் கூறும் வழக்கம் உண்டு. ஆணையிடும்போது, தோட்டத்தின்மேல் ஆணை, மலையின் மேல் ஆணை, பார்ப்பார்மேல் ஆணை, முருகன்மேல் ஆணை, என்று பலவாறாக ஆணையிட்டு உறுதி கூறுவார்கள். (பா. 8) தெய்வபக்தியுள்ளவர்கள் ஒன்றாகக் கூடுவர்; வாத்தியங்களுடன் தோத்திரப் பாடல்கள் பாடுவர்; இக்காலத்தில் பஜனை செய்வதுபோல் அக்காலத்திலும் இவ்வாறு பஜனை செய்து வந்தனர். (பா. 8) அக்காலத்து மக்கள், குதிரை, யானை, கோவேறு கழுதை, மாட்டு வண்டி, குதிரை வண்டி, பல்லக்கு இவைகளை வாகனங்களாகப் பயன்படுத்தி வந்தனர். (பா. 10) புண்ணிய நீராடுவோர் பொன்னாற் செய்த சங்கு, நண்டு, இரால் மீன், வாளை மீன் இவைகளைத் தண்ணீரிலே இறைப்பார்கள். (பா. 10) |