பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்179

இவன் காலத்திலே சேர நாட்டிலே வேதமும், வேத ஒழுக்கமும் விரிந்த செல்வாக்கு பெற்றிருந்தன; வேதியர்கள் பாராட்டப்பட்டனர்.

நான்காம் பத்து

இதை இயற்றியவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இவரால் பாடப்பட்டது இந்நூல் ஒன்றேதான். இவருடைய ஊர் காப்பியாறு; இவர் பெயர் காப்பியனார்.

இந்த நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்பவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய புதல்வன்; இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்திருந்தான்.

காப்பியனார் இந்நூலுக்காகப் பெற்ற பரிசு நாற்பது நூறாயிரம் பொன்; களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் ஆண்ட நாட்டிலே ஒரு பாகத்தையும் பெற்றார்.

ஐந்தாம் பத்து

இந் நூலாசிரியர் பரணர். கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் இப்பத்தின் தலைவன்.

பரணர், கபிலரைப் போன்ற சிறந்த புலவர். கபிலபரணர், என்ற சொற்றொடர் இலக்கணங்களிலே உம்மைத் தொகைக்கு உதாரணம். கபிலரும் பரணரும் ஒரு காலத்துப் புலவர்கள்; சிறந்த நட்பினர்கள்; என்று எண்ணலாம்.

பரணருடைய பாடல்கள் சங்க நூல்களிலே பலவுண்டு. அகநானூற்றிலே முப்பத்து நான்கு பாடல்கள். குறுந்தொகையில் பதினாறு பாடல்கள்; நற்றணையில் பன்னிரண்டு பாடல்கள்; புறநானூற்றிலே பதின்மூன்று பாடல்கள் இவர் பாடியவை.