கடல் கலங்கும்படி வேலாயுதத்தை வீசியவன்; சுருண்டு விழுகின்ற அலைகளையுடைய ஆழமான கடலிலே பகைவர் படைகளைப் புறமிட்டோடச் செய்தவன்; வெற்றி பொருந்திய புகழையுடைய குட்டுவன்’’. இந்தக் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனையே சிலப்பதிகாரச் செங்குட்டுவன் என்று நம்புகின்றனர் பலர். இப்பத்தின் பதிகத்திலே ‘‘கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி ஆரிய அண்ணலை வீட்டி’’ என்ற அடிகளை இவர்கள் ஆதரவாகக் கொள்வர். பரணர் பாடியுள்ள பத்துப் பாடல்களில் ஒன்றிலேனும் இக்குறிப்பு காணப்படவில்லை. ஆதலால் பதிகம் பாடிய உரையாசிரியர், சிலப்பதிகாரத்தை நினைவில் வைத்துக் கொண்டு, சிலப்பதிகாரச் செங்குட்டுவனும் இவனும் ஒருவனே என்று எண்ணி இவ்வாறு எழுதியிருக்கலாம். அல்லது இப்பத்து சிலப்பதிகார நிகழ்ச்சிக்கு முன்னரே பாடியதாக இருக்கலாம். ஆறாம் பத்து இதன் ஆசிரியர் கங்கைபாடினி நச்செள்ளையார் என்பவர்; இவர் பெண் புலவர்; இது ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பவன் மேல் பாடப்பட்டது. வானவரம்பன் என்றும் இவன் பெயர் வழங்கும். இவன் முப்பத்தெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்தான். இந்தப் பத்துப் பாடல்களுக்காக நச்செள்ளையார் நல்ல பரிசு பெற்றார். ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் இவர் பெற்ற பரிசு. அரசனுக்கு அண்மையில் வீற்றிருக்கும் பெருமையும் அடைந்தார். இப்புலவர் இந்நூலைத் தவிர குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலையும், புறநானூற்றில் உள்ள ஒரு பாடலையும் பாடியுள்ளார். |