182 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘வாரார் ஆயினும், இரவலர் வேண்டித் தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல். (பா. 55) இரவலர்கள் தாமாகவே உன்னிடம் வராவிட்டாலும் அவர்களைத் தேடிச் செல்வாய்; தேரிலே ஏற்றிக்கொண்டு வருவாய்; இன்சுவை உணவை அவர்களுக்கு அளிப்பாய்; உள்ளன்பு நிறைந்த சொற்களை அவர்களிடம் உரைப்பாய்; புகழ் நிறைந்த தோன்றலே’’. இவன் சிறந்த வள்ளல்; ஈத்துவக்கும் இன்பமே பெரிதென எண்ணி வாழ்ந்தான். ஏழாம்பத்து இதன் ஆசிரியர் கபிலர்; இந்நூலின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இன்றுள்ள சங்க நூல்களிலே கபிலரால் பாடப்பட்டிருக்கும் பாடல்கள் பல. இவருடைய வரலாற்றைக் கலித்தொகைப் பகுதியிலே காணலாம். இப்பத்துப் பாடல்களுக்குப் பரிசாகக் கபிலர் நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றார். நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று, கண்ணுக்கெட்டிய அளவுள்ள நாட்டையும் பெற்றார். சேரன், தானே அக்குன்றின்மேல் ஏறி நின்றான்; தன் கண்ணுக்கு எட்டிய பரப்புள்ள நாட்டைப் பாவலர்க்குப் பரிசாக அளித்தான். இம் மன்னவன் இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்திருந்தான். ‘‘பார்ப் பார்க்கு அல்லது பணிபு அறியலையே (பா. 63) பார்ப்பார்களைத் தவிர மற்றவர்களை நீ பணிந்து அறியமாட்டாய்’’ இம் மன்னன் கற்றவர்களையும், அறிஞர்களையும், நல்லொழுக்க முடையவர்களையும் போற்றிப் புரந்து வந்தான். |