பக்கம் எண் :

184எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

அரசாட்சியை மீண்டும் அரசனிடமே ஒப்புவித்தார்; தான் அமைச்சராய் இருந்து அரசனுக்கு உதவி செய்தார்.

பெருஞ்சேரல் இரும்பொறைக்குத் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவன் பதினேழாண்டுகள் வாழ்ந்தான்.

‘‘உயிர் போற்றலையே செருவத்தானே;
கொடை போற்றலையே இரவலர் நடுவண்;
பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி.                           (பா. 79)

போரிலே உன் உயிரைப் பொருட்படுத்த மாட்டாய்; இரவலர்க்கு ஈவதிலே என்றும் எக்கணக்கும் பார்க்கமாட்டாய்; பெரியோர்களைப் போற்றுவாய்; சிறியோர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொண்டு அவர்களைக் காப்பாற்றுவாய்’’.

இம் மன்னவன் ஒப்பற்ற வீரன்; சிறந்த கொடை வள்ளல; உயர்ந்த குணக்குன்று; என்னும் உண்மையை இதனாற் காணலாம்.

‘‘காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகார்ச் செல்வ! பூழியூர்மெய்ம்மறை!
கொல்லிப் பொருந! கொடித்தேர்ப் பொறைய!                         (பா. 78)

காவிரியாற்றின் நீரால் நிறைந்த-மிகச்சிறந்த அழகையுடைய-காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வனே! பாண்டியர்களின் காவலனே! கொல்லிமலையின் தலைவனே! வெற்றிக்கொடி பறக்கும் தேரையுடைய தலைவனே!”

இப் பெருஞ்சேரல் இரும்பொறை சிறந்த வீரன்; சோழர்களையும் பாண்டியர்களையும் போரிலே வென்றான்; சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் தன்கீழ் அடக்கியாண்டான்.