பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்185

தகடூரின் தலைவனான அதிகமான் நெடுமான் அஞ்சியை இப் பெருஞ்சேரல் போரிலே வென்றான்; தகடூரையும் தகர்ந்தான்; இச்செய்தியும் இவனைப் பற்றிய பாடலிலே காணப்படுகின்றது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற பெயரே இவ்வுண்மையை எடுத்துக் காட்டும். தகடூர் என்பது இன்று தருமபுரி என்று வழங்குகின்றது.

ஒன்பதாம் பத்து

இதன் ஆசிரியர் பெருங்குன்றூர்க்கிழார்; இப்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை.

பெருங்குன்றூர்க்கிழார் இப்பத்தைத் தவிர இன்னுஞ் சில பாடல்களையும் பாடியிருக்கின்றார். அகநானூற்றில் ஒன்று; குறுந்தொகையில் ஒன்று; நற்றிணையில் நான்கு; புறநானூற்றில் ஐந்து; இவர் பெயரால் காணப்படும் பாடல்கள்.

இளஞ்சேரல் இரும்பொறை இப்பத்துக்காக, இப்புலவர்க்கு அளித்த பரிசுகள் ஏராளம். முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகள், பல வீடுகள், சில ஊர்கள், அரிய ஆபரணங்கள், இவைகள் இவன் தந்த பரிசுகள். இச் சேரன் சிறந்த கொடையாளி; வீரன்; தெய்வ பக்தியுடையவன்; இவன் பதினாறு ஆண்டுகள் பாரிலே வாழ்ந்தான்.

இம் மன்னவன் நிறைந்த செல்வமுடையவன்; புகழ்வோர்க்கு வாரி வாரி வழங்குபவன்; ஏராளமான படைகளையுடையவன். இவ்வேந்தனுடைய இரக்கம், நிறைந்த குணம், சிறந்த செல்வம், உறவினரைக் காக்கும் உயர்ந்த பண்பு ஆகியவைகளை இப்பத்திலே காணலாம்.

இவ்வாறே பதிற்றுப்பத்திலே உள்ள ஒவ்வொரு பத்தும் ஒவ்வொரு சேர மன்னனைப் பற்றிப் பாராட்டிப் பாடப்பட்டது.