பக்கம் எண் :

186எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

அச் சேர மன்னர்களின் வரலாறுகள் அனைத்தையும் இந்நூலால் அறிவதற்கில்லை. ஆயினும் அவர்கள் வரலாறுகளைக் காண்பதற்குப் பல சான்றுகளை இந்நூலிலே காணலாம். இனி இப் பதிற்றுப்பத்திலே காணப்படும் சிறந்த செய்திகள் சிலவற்றைக் காண்போம்.

ஆட்சியின் அருமை

பண்டைத் தமிழ் வேந்தர்கள் தங்கள் நாட்டைக் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் தமக்கென வாழவில்லை; குடி மக்களின் குறை போக்கவே வாழ்ந்தனர். குடிமக்களும் மன்னனைத் தங்களைக் காக்கும் கடவுளாகவே மதித்தனர். குடிகளின் அன்பையும், ஆதரவையும் பெற்ற மன்னர்களே பகைவர்களைப் போரிலே வென்றனர்; வீரர்களாகச் சிறந்து விளங்கினர்.

‘‘நின்கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடு தொழுதேத்த,
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோயிலை ஆகியர் நீயே;                                        (பா. 89)

உன்னுடைய ஆட்சி செம்மையுடன் சீர்பெற்று விளங்குகின்றது; ஆதலால் நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் உன்னைக் கொண்டாடும்படி வாழ்வாயக! இவ்வுலகில் உயர்ந்த நிலையில் உள்ள அறிஞர்கள் உன்னைப் புகழும்படி வாழ்வாயாக! வேந்தனுக்குரிய கடமைகளை விடாமல் செய்து வாழ்வாயாக! போரிலே வெற்றியடைந்து புகழ்பெற்று வாழ்வாயாக! என்றும் நோயின்றி நிலைத்து வாழ்க!’’

பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சி தனியதிகார ஆட்சிதான்; ஆயினும் அது குடிமக்களால் கொண்டாடப்படும் ஆட்சியாக இருந்தது; அவர்கள் விரும்பும் ஆட்சியாக இருந்தது.