190 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
அவ்வேள்வியிலிருந்து கடலொலிபோலச் சமைக்கின்ற ஓசை யெழுந்தது’’. விருந்தினர்க்குச் செய்யும் சமையலை வேள்வி-அதாவது ‘‘அடுநெய்ஆவுதி’’ என்று குறிப்பதை இதனால் காணலாம். மேற்காட்டிய பகுதிகள் பதிற்றுப்பத்தின் இருபத்தோராவது பாட்டில் உள்ளவை. அந்தணர் வேள்வியும், விருந்தினர்க்குச் செய்யும் சமையலும் ஆவுதி-அதாவது வேள்வி என்று ஒரே பெயரால் சுட்டப்படுகின்றது. பண்டைத் தமிழ் வேந்தர்கள் வேள்வியையும், விருந்தையும் ஒரு தன்மையாகவே உணர்ந்தனர் என்பதற்கு இதுவே சான்றாகும். நன்னடத்தை பண்டைத் தமிழர்கள் நல்லொழுக்கத்திலே நாட்டமுடையவர்கள். உயிரினும் சிறந்தது ஒழுக்கமே என்ற உண்மையை உணர்ந்திருந்தனர். அறநெறிக்கு மாறான செய்ல்களால் நன்மையில்லை. ஆதலால் அறநெறிக்குத் தடையாக நிற்கும் அனைத்தையும் அறிந்து அவற்றைப் பின்பற்றாமல் பாதுகாத்து வந்தனர். ‘‘சினனே, காமம், கழி கண்ணோட்டம், அச்சம், பொய்ச் சொல், அன்புமிக உடைமை, தெறல், கடுமையொடு பிறவும் இவ் வுலகத்து அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும். (பா. 22) பொருளற்ற கோபம், காமவெறி, அளவுக்கு மீறிய தயவு, பகைவர்களுக்குப் பயப்படுதல். பொய் கூறல், பொருளின் மேல் பேராசை, நன்மைகளை நாசம் பண்ணுதல், கடுஞ்சொற் கூறல் இவைகளும், இவைகளைப் போன்ற குணங்களும், இவ்வுலகிலே அறநெறியிலே செல்லும் வண்டிக்கு. அது செல்லுகின்ற வழியிலே போடப்படும் முட்டுக்கட்டைகாளாகும்”. |