சிறப்பாக மன்னர்களும், பொதுவாக மக்களும் பண்டைக் காலத்தில் இவ்வாறு நல்லறத்தைப் பாதுகாப்பதில் கவலை கொண்டிருந்தனர். மனிதத்தன்மை தன் வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவன் மனிதன் அல்லன்; தன்னலத்தின் பொருட்டே அல்லும் பகலும் பாடுபடுபவன் அறிவுடையவன் அல்லன்; அவன் அறிவுடையோரால் மதிக்கப்பட மாட்டான். மனிதன் என்றால், இரக்கத்தன்மை வேண்டும்; குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் குணம் வேண்டும்; விட்டுக்கொடுக்கும் இணக்கம் வேண்டும்; உறுதியும், ஆண்மையும் உள்ளத்திலே நிலைத்திருக்க வேண்டும். இவைகள் மனிதத் தன்மையுள்ளவனிடம் மாறாமல் அமைந்திருக்க வேண்டிய குணங்கள். ‘‘நாட்டோர்க் கல்லது கண் அஞ்சலையே. (பா. 63) நண்பர்களிடந்தான் கண்ணோட்டங் காட்டுவாய்; மற்றவர்களிடம் இரக்கமின்றி நடந்து கொள்ள அஞ்சமாட்டாய்’’: ‘‘நிலம் திறம் பெயரும் காலை யாயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே (பா. 63) நிலம் தனது வலிமை குன்றும் காலத்தில் கூட, சொல்லிய சொல்லுக்கு மாறாக நடக்கும் பொய்யொழுக்கத்தை நீ மேற்கொள்ள மாட்டாய்’’. நட்டோர்களிடம் விட்டுக் கொடுக்கும் குணமும், உரைத்த மொழியைக் காப்பாற்றும் உறுதியும் உயர்ந்த மனிதத்தன்மை என்பதை இவைகளால் காணலாம். அமைதியால் ஆக்கம் அமைதி நிலவியிருக்கும் நாட்டில்தான் ஆக்கவேலைகள் நடைபெறும். சண்டைக் காலத்தில் நாடு செழிப்படையாது. |