192 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
மக்கள் பலர் போரிலே ஈடுபடுவர்; நாட்டின் செல்வம் போரால் நாசமடையும். சமாதான காலத்தில்தான் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. அச்சமின்றி அனைவரும் நாட்டின் நன்மைக்காக உழைக்க முடியும். இந்த உண்மையை ஒரு பதிற்றுப் பத்து பாடல் எடுத்துரைக்கின்றது. ‘‘திருவுடைத்தம்ம! பெரு விறல் பகைவர்; பைங்கண் யானைப்புணர் நிரை துமிய உரந்துரந்து எறிந்த, கறையடி கழற்கால், கடுமா மறவர்; கதழ் தொடை மறப்ப, இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா உறையுள், நீ தொழில் ஆற்றலின் (பா. 28) உன்னுடைய நாடு செல்வத்தை மிகுதியாகக் கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? மிகுந்த வலிமையுடையவர்கள் உன் பகைவர்கள்; உன்னுடைய வீரர்களோ பகைவர்களுடைய பசுமையான கண்களையுடைய யானைப்படைகள் அழியும்படி வலிமையுடன் படைக் கலங்களை வீசும் ஆற்றலுடையவர்கள்; அவர்கள் இரத்தக்கறை படிந்த அடிகளையும், வீரக்கழல் புனைந்த பாதங்களையும் உடையவர்கள்; விரைந்து பாயும் குதிரை வீரர்கள்; அவர்கள் சினத்துடன் அம்பு தொடுப்பதை மறந்திருந்தனர்; நாட்டைப் பாதுகாக்கின்றனர். உழவர்கள் பாடுபடுவதனால் விளைவு குறையவில்லை. துன்பமற்ற இடமாக இருக்கின்றது உனது நாடு. நீ உனது அரசாட்சியை நன்றாக நடத்துவதானல்தான் இவ்வாறு உனது நாட்டிலே அமைதி நிலவுகின்றது’’. சண்டையிலே தலையிடாமல் சமாதானத்துடன் வாழும் நாட்டிலே உணவுப் பஞ்சம் உண்டாகாது; விளைவு குன்றாது; பயிர்த்தொழில் நன்றாக நடைபெறும் என்ற உண்மையை இதனால் அறியலாம். |