குறிக்கப்பட்டிருக்கின்றன. கடைச்சங்க காலத்திலும், அதற்கு முன்னும் தமிழ் மக்கள் பற்பல தெய்வங்களைப் பரவி வந்தனர் என்பதைப் பதிற்றுப் பத்திலே காணலாம். பழக்க வழக்கங்கள் பண்டைக்காலத் தமிழகத்திலிருந்த பழக்க வழக்கங்கள் பலவற்றை இப்பதிற்றுப் பத்தின் மூலம் காணலாம். சேரமன்னர்கள் புலவர்களைப் போற்றிப் புரந்து வந்தனர்; தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் பாதுகாத்தனர்; வளர்த்தனர்; ஆடல், பாடல் முதலிய கலைகளை வளர்த்தனர்; அக்கலைகளைச் சுவைப்பதையும், அக்கலைஞர்களைக் காப்பாற்றுவதையும் பொழுது போக்காகவும் கடமையாகவும் கொண்டிருந்தனர். கலையை வளர்ப்பதிலே கலைஞர்களுக்கு ஊக்கமளித்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்துப் பாடல்கள் பலவற்றிலே காணலாம். வடநாட்டு மக்கள் ஆரியர்கள்; இமயமலையிலே ஆரியர்கள் நிறைந்தருக்கின்றனர் என்று தமிழர்கள் எண்ணினர். ‘‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’’ என்பது இதனை விளக்கும். (பா. 11) மாமிசம் உண்பதும் மதுவருந்துவதும் பாபம் என்று பண்டைத் தமிழர்கள் கருதியதில்லை. மாமிசங் கலந்த நெற்சோற்றையும், மதுவையும் உண்ட பசி தீர்ந்து வாழ்ந்தனர். (பா. 12, 18, 19) பட்டாடைகள் நெய்து அணிந்தனர். ‘‘நூலாக்கலிங்கம்’’ என்பது பட்டாடை. நூலாக் கலிங்கம்-நூற்காத நூலாற் செய்யப்பட்ட ஆடை. பட்டு நூல், தானே உண்டாவது. கையினால் நூற்ற நூலன்று. (பா. 12) |