198 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
உணவுத் தானிய வியாபாரிகளிடம் உயர்ந்த செல்வங்கள் உண்டு. அவர்கள் தம் கீழுள்ள குடிமக்களை அன்புடன் ஆதரித்து வந்தனர். அவர்கள் வியாபாரிகளாக மட்டும் இல்லை; பெரிய நிலத் தலைவர்களாவும் இருந்தனர். (பா. 13) வேற்படைக்கு உறைபோட்டு வைத்திருப்பார்கள். போருக்குப் புறப்படும்போது தானியங்களோடு தினையையும், இரத்தத்தையும் போர்முரசுக்குத் தூவிப் பலியிடுவார்கள். இதன் பிறகுதான் அம் முரசை இடம்பெயர்த்து எடுத்து வைத்துக் குச்சியினால் அடிப்பார்கள் (பா. 19) சங்க காலத் தமிழர்கள் வான நூல் அறிவு பெற்றிருந்தனர். கிரகங்களின் மாறுபாட்டால் மழைபெய்யும்; சிறப்பாக வெள்ளி யென்னும் கிரகம் மற்றைய கிரகங்களுடன் பொருந்தி நிற்பதைப் பொறுத்தே மழைபெய்யும். (பா. 24,69) இன்று பெரியாறு என்று வழங்கப்படுவது பதிற்றுப்பத்திலே பேரியாறு என்று வழங்கப்படுகின்றது. அவ்வாறு என்றும் வற்றாத நீர்ப்பெருக்குடையது. கோடை நீடித்தாலும், மலை காய்ந்தாலும், அருவி நீரேயில்லாமல் வறண்டாலும் பேரியாற்றிலே தண்ணீர் குறையாது; கரை புரண்டோடும். (பா. 28) பண்டைத் தமிழ் மன்னர்கள் தாமே போர்க்களத்திலே புகுவார்கள்; எதிரிகளுடன் நேர் நின்று போர்புரிவார்கள். (பா. 34) போரிலே வீரர்களுக்கு ஏற்பட்ட பெரும்புண்ணை ஊசியும் நூலும் கொண்டு தைத்து, மருந்திட்டு ஆற்றுவார்கள். போர்க்களத்தில் புண்பட்டவர்களுக்கு உடனுக்குடன் மருத்தவ உதவி அளிக்கப்பட்டு வந்தது. (பா. 42) |