பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்199

போரிலே வெற்றிபெற்று வந்த வீரர்களுக்கு மலர்மாலையிட்டு மரியாதை செய்வார்கள். வீரர்களுக்குப் போடும் மலர் மாலைகளிலே இஞ்சியையும் கோத்துக் கட்டியிருப்பார்கள். அவர்கள் அருந்துவதற்கு நல்ல மதுவையும் அளிப்பார்கள். அவ்வீரர்கள் மலர் மாலையில் உள்ள இஞ்சியைக் கடித்துக் கொண்டு மதுவை அருந்தி மகிழ்வார்கள். (பா. 42)

தமிழ் மன்னர்கள் போரினால் பகைவர் நாட்டிலிருந்து கொண்டுவந்த செல்வங்களைத் தங்கள் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அச்செல்வங்கள் எவ்வளவு சிறந்தனவாயினும் அவைகளை இரவலர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள். (பா. 44)

நல்ல ஆபரணங்களையும் செல்வங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். இவைகளைச் சேமித்து வைத்திருக்கும் இடத்திற்குப் பந்தர் என்று பெயர். (பா. 55)

வீடுகளில் நல்ல சித்திர வேலைப்பாடுகள் அமைந்திருக்கும். அரிய வேலைப்பாடுகளுடனேயே வீடுகளை அமைப்பார்கள். ‘‘ஓவத்தன்ன வினைபுனை நல்இல்’’ சித்திரத்தைப்போன்ற வேலைப்பாடமைந்த நல்ல வீடு; என்பதனால் இவ்வுண்மையை உணரலாம். (பா. 61)

கள்விற்பனை செய்யும் இடத்தை அறிவிப்பதற்கு அடையாளமாகக் கொடி கட்டியிருப்பார்கள். அக்கொடியிலே ‘‘கட்கொடி” என்பதற்கான அடையாளம் இருக்கும். (பா. 68)

அரசர்கள் தங்கள் பகைவர்களின் பட்டத்து யானைகளைக் கொல்வர்; அவைகளின் தந்தங்களால் செய்யப்பட்ட கட்டிலின்மேல் அமர்ந்திருப்பர். இதனால், தந்த வேலைகளிலே தமிழர்கள் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அறியலாம். (பா. 79)