200 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பகைவரை எதிர்த்துப் போர் செய்ய முடியாதவர்கள் தம்மைக் காப்பாற்றும்படி தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள். (பா. 82) மதங்கொண்ட யானையை அடக்குவதற்காக அதனுடன் பெண் யானையைச் சேரவிடுவார்கள். (பா. 82) இவைபோன்ற இன்னும் பல பழக்கவழக்கங்களையும், செய்திகளையும், பதிற்றுப்பத்திலே காணலாம். இப்பதிற்றுப்பத்துப் பாடல்கள் ஒரே காலத்தில் பாடப்பட்டவையல்ல; பல காலத்தில், பல சேர மன்னர்களைக் குறித்துப் பல புலவர்களால் பாடப்பட்டவை. என்று நம்புகின்றனர். ஆனால் இப்பாடல்களின் போக்கு அவ்வாறு காணப்படவில்லை. ஒருவரால் பாடியது போலவே காணப்படுகின்றது. ஏனைய சங்க நூற்பாடல்களைப்போல் அவ்வளவு சுவையுடைய பாடல்கள் அல்ல என்று கருதுகின்றனர் சிலர் இன்று வழக்கில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்களை இந்நூற்பாடல்களிலே பார்க்கலாம். தமிழ் நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு இந்நூல் பெருந்துணை செய்யும். |