202 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
பாடல்களிலே இடையிடையே சில சொற்கள் இல்லை; இன்று இந்நூலிருந்து சிதையாமல் நமக்குக் கிடைக்கும் பாடல்கள் 353தான். மற்ற தொகை நூல்களைப் போல புறநானூறும் பல புலவர்களின் பாடல்களைத் தொகுத்து அமைத்த ஒரு நூல். தனித்தனிப் புலவர்களால் தனித்தனி மக்கள்மேல் பாடப்பட்டவைகள்தாம் இந்நூலின் பாடல்கள். யாரையும் குறித்துப் பாடாமல் பொது நீதிகளைக் குறித்துப் பாடியிருக்கும் சில பாடல்களும் உண்டு. ஆசிரியர்கள் புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய, புலவர்கள் 157க்கு மேற்பட்டவர்கள். 129 பேர் பாட்டுடைத் தலைவர்கள். இப்பொழுதுள்ள 398 பாடல்களில் 14 பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலைப் பாடிய புலவர்கள் ஒருகாலத்தினர் அல்லர்; ஒரு குலத்தினர் அல்லர்; ஒரு சமயத்தினர் அல்லர்; ஒரு கொள்கையினர் அல்லர்; அவர்கள் பலவேறுபட்ட காலத்தவர்கள்; பல வேறுபட்ட குலத்தவர்கள்; பலவேறுபட்ட சமயத்தினர்; பலவேறுபட்ட கொள்கையினர். தலை, இடை, கடையென்னும் முச்சங்கப் புலவர்களின் பாடல்களும் இந்நூலிலே அடங்கியருக்கின்றன. புலவர்களிலே அரசர்கள் உண்டு; குறுநில மன்னர்கள் உண்டு; ஒளவையார், காக்கை பாடினியார், ஒக்கூர்மா சாத்தியார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, பாரிமகளிர், மாற்பித்தியார், மானோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார் போன்ற பெண்மணிகளும் உண்டு. |