பாடப்பட்டவர்களிலே முடியுடை மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள், புலவர்கள் பலரும் உண்டு. பாடினவர்களைப்போலவே பாடப்பட்டவர்களும் பலகாலத்திலே வாழ்ந்தவர்கள்; பல வகுப்பைச் சேர்ந்தவர்கள்; பலதிறப்பட்ட கொள்கைகளையுடையவர்கள். இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை. இவைகளைத் தொகுக்கும்படி செய்தவர் பெயரும் தெரியவில்லை. நூலின் சிறப்பு இந்நூல் தமிழிலக்கியத்தின் அணையா விளக்கு; பழங்காலக் கருவூலம்; பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் சேமிப்பு. எட்டுத்தொகையுள் இதற்கிணையானது ஏதொன்றும் இல்லை. எத்தகைய புகழுக்கும் ஏற்றது புறநானூறு. ஏனைய நூல்களைக் காட்டினும் இந்நூலால் பழந்தமிழர்களின் வாழ்க்கை வரலாறுகள் பலவற்றையறிலாம். இந்நூல் நமக்குக் கிடைத்திராவிட்டல் தமிழர் பெருமையை-வரலாற்றை-பண்பாட்டை-நாம் இன்று அறிந்திருக்கும் அளவுக்கு வேறு எந்த நூலாலும் அறிந்து கொள்ள முடியாது. இந்நூற் பாட்டுக்களிலே பெரும்பாலானவை வறுமையையே வாழ்க்கையாகக் கொண்ட பல புலவர்களால் பாடப்பட்டவை; தங்கள் வறுமையைத் தீர்க்கும் வள்ளல்களைப் பாராட்டிப் பாடப்பட்டவை அவை. ஆகையால் அவர்களுடைய பாடல்களிலே பல உண்மைகளையும், மக்கட் பண்பையும் காணலாம். தமிழர்களின் சிறந்த சமுதாய வாழ்வு, விருந்தோம்பற் சிறப்பு, உயர்ந்த ஒழுக்கம், உறுதியான கொள்கை, தன்நலமற்ற |