பக்கம் எண் :

204எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

தியாகம், தலைநிமிர்ந்த தன்மான வீரவாழ்வு இவைகளையெல்லாம் இந்நூலால் அறியலாம். ‘‘பண்டைத்தமிழர் வரலாற்று நூல்’’ என்று புறநானூற்றைக கூறுவது பொருந்தும்.

தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு, வீரம், புலமை இவைகளைப் பற்றியும் புறநானூற்றுப் பாடல்கள் புகல்கின்றன.

தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த புலமை; ஒருவருக்கும் அஞ்சாமல் உண்மையை எடுத்துரைக்கும் உரம்; இவைகளுக்கு இந்நூற் பாடல்கள் எடுத்துக்காட்டாம். இந்நூலின் சிறப்புக்கு உதாரணமாகச் சில செய்திகளைக் காண்போம்.

தமிழர் பண்பாடு

பழந்தமிழர் பண்பாடு மிக உயர்ந்தது. உலகமெல்லாம் பாராட்டிப் பின்பற்றக்கூடியது. தமிழ் மக்கள் உலகத்தை ஒன்றென்று கருதினர்; உலக மக்களை ஒரே குலத்தவராக எண்ணினர். இத்தகைய உயர்ந்த-பரந்த நோக்கம் தமிழர்களின் ஒப்பற்ற பண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

“எல்லா ஊர்களும் எம்முடைய சொந்த ஊர்கள்; எல்லா மக்களும் எம்முடைய உறவினர்கள்; எம்முடைய நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல; யாம் இன்புறுவதும் துன்புறுவதுங்கூட அவை போலத்தான். சாவு ஒரு அதிசயமன்று (இயற்கை). ஆகையால் இவ்வுலக வாழ்வு இனிமையானது என்று மகிழவுமாட்டோம்; வெஞ்சினத்தால் இவ்வாழ்வு துன்பமுடையது என்று வெறுக்கவு மாட்டோம்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா,
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே                                      (பா. 192)