இது கணியன்பூங்குன்றனார் பாட்டு. இதுவே தமிழர்களின் தனித்த பண்பாட்டை விளக்கப் போதுமான தாகும். ஊர் என்றாலும் ஒன்றுதான்; ஊர்களைக் கொண்ட நாடு என்றாலும் ஒன்றுதான். ஆதலால் ‘‘யாதும் ஊரே’’ என்ற தொடரில் ‘‘யாதும் நாடே’’ என்ற கருத்தும் அடங்கியிருப்பதை அறியலாம். யாதானும் நாடாமால், ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்ற குறளும் புறநானூற்றுப் பாடலின் கருத்தை விளக்குவதுதான். ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்ற இந்தப் புறநானூற்று வரியின் உண்மைக் கருத்தை உலக மக்கள் பின்பற்றி ஒழுகுவார்களானால் இவ்வுலகில் எத்தகைய குழப்பமும் ஏற்படாது. உலகத்தை உருக்குலைக்கும் போர் வெறி ஒழியவேண்டுமானால்-இன வெறி மறைய வேண்டுமானால்-சாதி வெறி சாகவேண்டுமானால்-மதவெறி மாளவேண்டுமானால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழி உலக முழுவதும் பரவவேண்டும். இது உலக சமாதானத்தை நிலைநாட்டும் உயர்ந்த குறிக்கோளுடைய ஒப்பற்ற மொழி. தீமையும் நன்மையும் பிறரால் வருவனவல்ல; இன்புறுதலும் துன்புறுதலுங் கூட இவை போலத்தான்; நம்முடைய அறிவுத் திறமை, நடத்தை காரணமாகத்தான் இவைகள் நம்மையடைகின்றன. இவ்வுண்மையை உணர்ந்திருப்பவர்கள் எவரிடமும் வெறுப்புக் காட்ட மாட்டார்கள்; எவரையும் பகைத்துக் கொள்ளமாட்டார்கள்; எவருக்கும் இன்னலிழைக்கவும் மாட்டார்கள், அனைவரிடமும் நண்பர்களாக-உறவினர்களாக அன்புடன் பழகுவார்கள். |