பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்207

முன்னேயே தமிழர்கள் வலியுறுத்திவந்தனர். குடி மக்களுக்காகத்தான் அரசு; குடி மக்களின் ஊழியன்தான் மன்னவன் என்ற கருத்து நிலைத்திருந்தது. இதனால்தான் பண்டைத் தமிழ் மன்னர்கள் அநீதிக்கு அஞ்சினர்; குடிமக்களின் எண்ணப்படி கோலோச்சினர்; நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தனர். உலகத்துக்கு உயிர் அரசுதான் என்பது பழந்தமிழர் கருத்து.

‘‘உலகத்திற்கு நெல்லும் உயிர் அன்று; தண்ணீரும் உயிர் அன்று; இப்பரந்த உலகம் மன்னனைத்தான் உயிராகக் கொண்டிருக்கின்றது. ஆகையால் ‘‘நான்தான் இவ்வுலகத்திற்கு உயிர்’’ என்று அறிந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்வது வேற்படைகள் மிகுந்த சேனைகளையுடைய அரசன் கடமையாகும்.

நெல்லும் உயிர்அன்றே, நீரும் உயிர்அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேல் மிகுதானை வேந்தற்குக் கடனே’’                            (பா. 186)

இப்பாடல் அரசியலின் முதன்மையையும், அரசனுடைய கடமையையும் கூறிற்று. இது மோசிகீரனார் என்னும் புலவர் பாட்டு.

இப்பாடலை மேலோட்டமாகப் பார்த்தால் நகைப்பு கூட வரலாம். உணவும் தண்ணீரும் இன்றேல் உயிர்வாழ முடியாது. இவ்வுண்மையை மறுத்து, அவைகள் மக்களுடைய உயிரைக் காப்பனவல்ல; மன்னன்தான் மக்களுடைய உயிரைக் காப்பவன் என்று நவில்வது நகைப்புக்கிடமல்லவா? மன்னவனே மாநிலத்தின் உயிர் என்ற கருத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; அப்பொழுதுதான் இச் செய்யுளின் சிறந்த கருத்து நமது சிந்தையைக் கொள்ளை கொள்ளும்.