208 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
மோசிகீரனார் அவர் காலத்தையொட்டி மன்னவனே மாநிலத்தின் உயிர் என்று உரைத்தார். நாம் இக்காலத்தை ஒட்டி ‘‘அரசாட்சியே மக்களின் உயிர்’’ என்று மாற்றிக் கொண்டால் போதும். இக்காலத்துக்கும் இப்பாட்டின் கருத்து ஏற்றதாகும். நாட்டின் முன்னேற்றத்தை-மக்களின் நல்வாழ்வைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசாங்கம் உள்ள நாட்டிலே வறுமைதான் குடிகொண்டு வாழும். நாட்டிலே நீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: உணவுப்பொருள் ஏராளமாக விளைவதற்கு வழிசெய்ய வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான கைத்தொழிற் பண்டங்களைப் பெருக்குவதிலும் கவலை செலுத்த வேண்டும். இவைகளை அரசாட்சியினால் தான் ஆற்றமுடியும். இவ்வுண்மைகளை அடக்கிக்கொண்டிருப்பதே மேலே காட்டிய பாடல். ஆட்சியின் அடிப்படை ஆட்சி அலங்கோலமாகாமல் நிலைத்திருப்பதற்கான அடிப்படையை ஆளுவோர் அறிந்திருக்க வேண்டும். அந்த அடிப்படைக்கு ஆட்டமில்லாமல் நடந்துகொள்வோருடைய ஆட்சிதான் அழியாமல் நிலைத்திருக்கும்; அவ்வாட்சியைத் தான் மக்கள் மதிப்பார்கள்; ஆதரிப்பார்கள். அனைவரையும் ஒன்றாகக் கருதி-விருப்பு வெறுப்பின்றி-சமநீதி வழங்கும் அறநெறியைப் பின்பற்றுவதே ஆட்சியின் அடிப்படை. இந்த அடிப்படையை மறந்துவிட்டு அதிகாரச் செருக்கால்-படை பலத்தால்-மக்களை அடக்கி ஆளமுடியாது. ஆயுத பலத்தால் மக்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்று நினைப்பவர்கள் அரசின் அடிப்படையை அறியாதவர்கள். இவ்வுண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டினால் உணரலாம். |