பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்209

‘‘அரசாட்சியின் வெற்றி படைபலத்திலே யில்லை. கடுமையான கோபத்துடன் எதிரிகளைக் கொன்று குவிக்கின்ற யானைப் படைகள் இருந்தால்தான் என்ன? விரைந்து பாயக்கூடிய குதிரைப்படைகள் குவிந்திருந்தால்தான் என்ன? நீண்ட கொடிகள் பறக்கின்ற உயர்ந்த தேர்ப்படைகள் திரண்டிருந்தால் தான் என்ன? கலங்காத நெஞ்சமும், புகழும் உடைய காலாட் படைகள் கணக்கின்றியிருந்தால்தான் என்ன? இவைகள் அரசாட்சியின் அடிப்படைகள் அல்ல. இவற்றால் ஆட்சிக்கு வெற்றியில்லை. அரசாட்சியின் வெற்றி, சிறந்த அறநெறியைத்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

கடுஞ்சினத்த கொல்களிறும்,
கதழ்பரிய கலிமாவும்,
நெடும்கொடிய நிமிர்தேரும்,
நெஞ்சுடைய புகல்மறவரும், என
நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்’’                              (பா. 55)

இது, மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் பாட்டு இதிலே பொதிந்துள்ள உயர்ந்த உண்மையை, ஆளுவோர் உள்ளத்திலே மறக்காமல் வைப்பார்களானால், அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு படை பலத்தைப் பெருக்க மாட்டார்கள். நாட்டை நாசமாக்கும் நவீன போர்க்கருவிகளைச் செய்வதிலே பணத்தைப் பாழாக்க மாட்டார்கள்; அறிவையும் வீணாக்க மாட்டார்கள். ‘‘படைபலம் வெற்றி தராது; மக்களின் ஆதரவே ஆட்சியை நிலை நிறுத்தும் அடிப்படை’’ என்ற உண்மையை உணர்வார்கள்.

வரிக்கொடுமை

அளவுக்குமேல் தாங்க முடியாத வரிகளை மக்கள் தலையிலே சுமத்தும் அரசாங்கம் நிலைத்து நிற்க முடியாது; அவ்வரசு வெறுப்படைந்த மக்களால் வீழ்த்தப்படும்