2. ஐங்குறு நூறு நூலின் வரலாறு ஐந்து நூறு பாடல்களைக் கொண்ட நூல் ஐங்குறுநூறு. இந்நூலிலே ஐந்நூறு பாடல்கள் உண்டு. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று தனி. அது பாரதம் பாடிய பெருந் தேவனாரால் பாடப்பட்டது. அதையும் சேர்த்து இப்பொழுதுள்ள பாடல்களின் எண்ணிக்கை ஐந்நூற்றொன்று. இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலும் நூறு நூறு பாடல்கள் உண்டு. இந்தப் பாடல்கள் அனைத்தும் குறுகிய பாடல்கள்; மூன்றடி முதல் ஆறடி வரையில் அமைந்தவை. ஆகையால்தான் இந்நூலுக்கு ஐங்குறுநூறு என்று பெயர் வைத்தனர். இந்த ஐந்து பகுதிகளும் தனித்தனியே ஐந்து புலவர்களால் பாடப்பட்டவை. முதல் நூறு மருதத்திணையைப் பற்றிக் கூறுவது; இரண்டாவது நூறு நெய்தல் திணையைப் பற்றிச் சொல்லுவது; மூன்றாவது நூறு குறிஞ்சித் திணையைக் குறித்துக் கூறுவது; நான்காவது நூறு பாலைத் திணையைப் பற்றிப் பாடுவது; ஐந்தாவது நூறு முல்லைத் திணையைப் பற்றி மொழிவது. ஒவ்வொரு நூறும் பத்துப் பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பத்திலும் பத்துப் பத்துப் பாட்டுக்கள். |