22 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
எட்டுத் தொகை நூல்களைச் சேர்ந்த அகப்பொருள் பற்றிய இலக்கியங்களிலே ஐங்குறுநூறு மிகவும் அழகான பாடல்களைக் கொண்டது. சிறிய பாடல்கள்; அரிய இலக்கியச் சுவை நிறைந்தவை; படிப்பதற்கு இனிமையானவை; எளிதிற் பொருள் விளங்கக் கூடியவை. இந்நூலைப்போல ஒவ்வொரு திணையைப் பற்றிய பாடல்களையும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரித்து முறைப்படுத்திப் பாடப்பட்ட நூல் வேறு ஒன்றுமில்லை. ஐந்து சிறந்த சிறு நூல்கள் சேர்ந்த ஒரு நூல்தான் இந்த ஐங்குறு நூறு. ஐந்தும் அகப்பொருட் செய்திகளைக் கூறுவதால் ஒரே நூலாக்கப்பட்டது. புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்னும்புலவர் இந்த ஐந்து நூறு பாடல்களையும் ஒன்றாகத்தொகுத்தார்; ஒரே புத்தகமாக்கினார்; ஐங்குறு நூறு என்று பெயர் கொடுத்தார். இவர் கடைச் சங்கப் புலவர்களிலே ஒருவர். கூடலூர் என்னும் ஊரிலே பிறந்தவர். வேளாளர் குடியிலே தோன்றியவர். கிழார் என்பது வேளாளார்க்குரிய குடிப்பெயர். புலத்துறை முற்றிய என்பது இவருடைய திறமையைக் குறிக்கும் சிறப்புப் பெயர். அறிவுத் துறையிலே நிரம்பியவர் என்பதே இதன் பொருள். இந்த நூலைத் தொகுக்கும்படி செய்தவன் சேர மன்னன் ஒருவன். அவன் பெயர் ‘‘யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை’’ என்பது. இவனுடைய புகழ் தமிழ் நூல்களிலே பரந்து கிடக்கின்றது. இவன் சிறந்த வீரன்; கொடைவள்ளல். இந்த இரும்பொறையும் கூடலூர் கிழாரும் நண்பர்கள். இந்த மன்னனுடைய உதவியினால் இந்நூலைத் தொகுத்தார் கூடலூர் கிழார். |