நூலாசிரியர்கள் முதல் நூறு மருதத்திணை; இதைப் பாடியவர் ஓரம் போகியார் என்னும் புலவர். இவரும் கடைச்சங்கப் புலவர்களிலே ஒருவர். இந்த நூறு பாடல்களைத் தவிர இன்னும் பத்துப் பாடல்களை இவர் பாடியிருக்கின்றார். அவைகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அகநானூற்றிலே இரண்டு, குறுந்தொகையிலே ஐந்து, நற்றிணையிலே இரண்டு, புறநானூற்றிலே ஒன்று இவருடைய பெயரால் காணப்படும் பாடல்களாகும். இவருடைய அகப்பொருட் பாடல்களிலே பெரும்பாலானவை மருதத்திணையைப் பற்றியவை. ஆகையால் இவர் மருத நிலத்திலே வாழ்ந்தவர்; மருத நில மக்களின் பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர் என்று தெளியலாம். இவர் சேர, சோழ, பாண்டியர்களாகிய மும்மன்னர்களைப் பற்றியும் தமது பாடல்களிலே குறிப்பிட்டிருக்கின்றார். இரண்டாவது நூறு நெய்தல் திணை; இதைப் பாடிய புலவர் அம்மூவனார். மூவனார் என்பதும் கிழார் என்பது போலவே குடிப்பெயராகும். மூவனார் என்பதும் மூப்பனார் என்பதும் ஒரே பெயர். அம்-மூவனார். அழகிய மூவனார். இவரும் கடைச்சங்க காலப் புலவர்களிலே ஒருவர். இந்த நெய்தல் திணையைத் தவிர இன்னும் இருபத்தேழு பாடல்கள் சங்க நூல்களிலே இவர் பெயரால் காணப்படுகின்றன. அகநானூற்றில் ஆறு, குறுந்தொகையிலே பதினொன்று, நற்றிணையிலே பத்து, இவர் பாடியவை. இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நெய்தல் திணையைப் பற்றியே கூறுகின்றன. இதனால் இவர் நெய்தல் நிலமக்களுடன் பழகியவர், அவர்களுடைய பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர், என்று கருதலாம். |