நூறு செறுவாயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடியாத்து நாடு பெரிது நந்தும்; மெல்லியன் கிழவனாகி கைவலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடுமே’’ (பா. 184) இதைப் பாடிய புலவர் பிசிராந்தையார் என்பவர். இவர் சிறந்த அரசியல் வல்லுநர். இதனை இப்பாடலால் அறியலாம். இப்பாடலின் கருத்து எந்தக் காலத்திலும் அழியாமல் நிற்கும் அரும் பொருள். மக்களுக்காக வாழும் அரசாங்கம் எதுவும் இவ்வுண்மையை மறக்க முடியாது; மதிக்காமற் புறக்கணிக்கவும் முடியாது. சிறந்த ஆட்சி ஒரு சிறந்த ஆட்சி எவ்வாறு செயற்படவேண்டு்மென்பதை மற்றொரு பாட்டு தெளிவாகத் தெரிவிக்கின்றது. அந்தப் பாடலைப் பாடியவரும் அரசியல் அறிஞரான பிசிராந்தையார்தான். பிசிராந்தையாரின் வரலாறே பெரிதும் வியக்கத்தக்க நிகழ்ச்சியைக் கொண்டது. இவர் பழந்தமிழ்ப் பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் ஊரிலே பெருமையுடன் வாழ்ந்தவர். உறையூரிலே இருந்து அரசாண்ட கோப்பெருஞ் சோழனொடு ஓருயிரும் ஈருடலுமாக இணைந்த நட்புள்ளவர். ஆந்தையாரும் சோழனும் ஆருயிர் நட்பினர் என்பதைத் தமிழ் நாட்டினர் அனைவரும் அறிவர். இருவரும் உயிரோடு உறைந்த வரையிலும் ஒரு வரையொருவர் நேரே பார்த்துப் பழகியவர்கள் அல்லர். |