212 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
ஆந்தையார் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆர் வந்தாலுஞ் சரி அவர்களை அன்புடன் வரவேற்பான் சோழன்; அவர்களுக்கு வேண்டியவற்றை விருப்பத்துடன் அளிப்பான்; இக்குணத்திலே கோடாதவன் கோப்பெருஞ் சோழன்; கோப்பெருஞ் சோழன் பெயரைக் கூறிக்கொண்டு எவர் வந்தாலுஞ் சரி அவர்களை அன்புடன் உபசரிப்பார் ஆந்தையார். சோழன் மண்ணுலுகை விட்டு மறைந்த செய்தியை அறிந்த ஆந்தையார் அவன் இறந்த இடத்தை அடைந்தார்; தாமும் உயிர்விட்டார்; இத்தகைய இணையற்ற நட்பினராக வாழ்ந்தனர் இவ்விருவரும். பிசிராந்தையார் வயது முதிர்ந்த பெருங்கிழவர்; அவர்காலத்தில் அவர் பெருமை தமிழ் நாட்டினர் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரைக் கண்களால் கண்டவர் சிலர்; அவருடைய பெரும் புலமையைப் பற்றிக் காதுகளாற் கேட்டவர் பலர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள், அவர் தாடியும் தலை மயிரும் நரைத்த தள்ளாத கிழவராயிருப்பார் என்று எண்ணியிருந்தார். இப்படி எண்ணியிருந்தவர்களிலே சிலர், ஒருநாள் அவரைச் சந்தித்தனர். அவர்கள் எண்ணியிருந்தபடி பிசிராந்தையார் தடியூன்றி நடக்கும் தள்ளாத கிழவராகக் காணப்படவில்லை; அவர் தலைமயிரும் தாடியும், கருகருவென நாகப்பழத்தின் நிறம் போல் நன்றாகக் காட்சியளித்தன. அவர்கள் வியப்புற்றனர். தங்களுக்குண்டான வியப்பை அவரிடமே அறிவித்தனர். ‘‘உங்கள் வயது பலவாயிற்றே! இன்னும் ஏன் உங்கள் தலைமயிர் நரைக்கவில்லை? இதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டேவிட்டனர். இக்கேள்விக்கு ஆந்தையார் அளித்த விடைதான் அந்தப் பாட்டு. |