| 214 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
உயிர் வாழ்வார்கள். இவ்வுண்மையை இப்பாடல் வலியுறுத்துவதைக் காணலாம். இத்தகைய அரசுதான்-நாடுதான் ஒரு எடுத்துக்காட்டான அரசாகும்; நாடாகும். தமிழர் வீரம் தமிழர்களின் ஒப்பற்ற வீரத்தைப் பற்றி உரைக்கும் பாடல்கள் பலவுண்டு. வீரம் என்றால் இளைத்தவர்களை - வீணாக இன்னலுக்கு ஆளாக்கித் தான் மட்டும் இன்புற்று வாழ்வதன்று; மற்றவர்களைக் காட்டிலும் தான் ஆற்றலுடையவன் என்பதை அறிவித்துக் கொள்ளுவதன்று. தான் கொண்ட கொள்கையிலே உறுதியுடன் நிற்றல்; தான் செய்யத் தொடங்கிய செயல்களை முட்டுக்கட்டைகளுக்கு அஞ்சாமல் முயற்சியுடன் செய்து முடித்தல்; தன் மானத்திற்கு இழுக்கு வராமல் தன் செயலிலே வெற்றியடைதல்; தன்னைக் காரணமின்றித் தாழ்த்திப் பேசுவோர் நாணும்படி அவர்கள் செருக்கைச் சிதைத்தல். இவைகளே வீரத்தின் இயல்பு. இத்தகைய சிறந்த வீர முடையவர்களே இந்நாட்டுத் தமிழ் மன்னர்கள். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு ஒன்றே இவ்வுண்மையை விளக்கப் போதுமானதாகும். இவன் வீரத்திலே மிகுந்த வேந்தன் மட்டும் அன்று; செந்தமிழ்ப் புலவனாகவும் சிறந்திருந்தான். ‘‘படை பலத்தால் என்னை இகழ்ந்துரைத்த வேந்தர்களுடன் வீரப்போர் புரிவேன்; அவர்கள் சேனைகள் சிதையத் தாக்குவேன். அவர்களுடைய முரசுகளுடன் அவர்களையும் சிறை பிடிப்பேன். இப்படிச் செய்யேனாயின் என் குடை நிழலிலே இருப்பவர்கள், தாங்கள் போய்த் தங்குவதற்கு வேறு இடங்காணாமல் ‘‘எமது அரசன் கொடுங்கோலன்’’ என்று என்னைத் தூற்றும் கொடியவனாவேன். |