‘‘உலகம் உள்ளவரையிலும் மாறாத புகழுடைய மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட புலவர்கள் என்னுடைய நாட்டைப் புகழ்ந்து பாடாமல் புறக்கணிப்பார்களாக. இரக்கின்றவர்களுக்கு எதையும் கொடுக்க முடியாத வறுமையையும் யான் எய்துவேனாக. உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேஎனாயின், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது ‘‘கொடியன் எம்இறை’’ எனக் கண்ணீர்பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என்நிலவரை; புரப்போர் புன்கண்கூர இரப்போர்க்கு ஈயா இன்மையான் உறவே’’ (பா. 72) இந்தப் பாட்டிலே நெடுஞ்செழியனுடைய வீரமும், நேர்மையும், புலவர்களுடைய பெருமையும் காணப்படுகின்றன. பகைவர்க்குப் பணிகின்றவன் வீரமுடைய வேந்தன் அல்லன்; குடிகளைக் கொடுமைப்படுத்துகின்றவன் ஒரு கோழை. புலவர்கள் வீரனையே விரும்புவார்கள்; அவனுடைய நாட்டையே பாராட்டிப் பாடுவார்கள்; கோழையைக் கொஞ்சமும் மதிக்கமாட்டார்கள். இவ்வுண்மை இப்பாடலிலே பொதிந்திருப்பதைக் காணலாம். இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சேர மன்னன்; ஒப்பற்ற வீரன். ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் அவனைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார். |