| 216 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘பகைவர்களுடைய கோட்டை அவர்களிடம் இருக்கும்போதே, அதைப் பிறர்க்குத் தானமாகத் தந்து விடுவாய்! ‘‘அந்தக் கோட்டை உங்களுடையது; எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குக் கொடுக்கும் பண்புடைய வள்ளல் நீ. ஒன்னார் ஆர் எயில் அவர்கட் டாகவும் நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!’’ (பா. 203) இப்பகுதி அந்த இளஞ்சேட் சென்னியின் வீரத்தை விளக்கும். இவ்வீரமும் தன்னலமற்ற ஆண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். எதிரியின் கோட்டையைத் தன் வசமாக்குவதற்கு முன்பே அதை மற்றொருவர்க்குக் கொடுப்பதென்றால், இதற்கு எத்தகைய நெஞ்சுரம் வேண்டும்? எதிரியை வெல்வது உறுதியென்பதில் எவ்வளவு நம்பிக்கை வேண்டும்? தோல்வி மனப்பான்மையை தமிழனிடம் இருந்ததில்லை என்பதற்கு இப்பாடல் ஒரு உதாரணமாகும். இச்செய்யுளின் கருத்தைக் கம்பன் தன் காவியத்தில் ஓரிடத்திலே புகுத்தியிருப்பது புகழத் தகுந்தது. இன்னும் இராம-இராவணப் போர் தொடங்கவில்லை; இலங்கை இராவணன் வசத்திலேயே இருக்கின்றது; இந்நிலையிலே விபீஷணன் இராமனைச் சரணைடைகின்றான்; உடனே இராமன் ‘‘இலங்கை அரசு உன்னுடையதே’’ என்று உறுதிமொழியளித்தான்; அவனை இலங்கை மன்னனாக வைத்து முடிசூட்டினான். வெற்றியிலே நம்பிக்கையுள்ள வீரன் இராமன் என்பதை விளக்கவே இக்கதையமைப்பு. புறநானூற்றைப் படித்த கம்பனுடைய கற்பனை இது. இவ்வாறு தமிழ் மன்னர்களின் அருமையான ஆண்மையை விளக்கும் அழகிய பாடல்கள் பலவுண்டு. |