அறப் போர் தகுந்த காரணமின்றிப் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிலே தலையிடமாட்டார்கள். தங்கள் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் வேந்தர்களின் மேல் போர் தொடுப்பார்கள்; சேனைகளின் பெருக்கால் செருக்கடைந்து தங்களைப் பழிக்கும் மன்னர்கள் மேல் படையெடுப்பார்கள். அக்காலத்திலே போரால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தேற்படுவதில்லை. படைகளும் பண்டங்களுந் தாம் போர்க்களத்திலே பாழாகும். பொதுமக்களுக்கு அறிவித்த பின்னரே போர் தொடங்குவார்கள். போர் செய்வதிலும் அவர்கள் அறநெறியைப் போற்றி வந்தனர். ‘‘பசுக்களே; பசுவின் தன்மையையுடைய பார்ப்பனர்களே! பெண்களே! நோயாளிகளே! பிதிர்லோகத்தில் வாழ்கின்றவர்களுக்கான சிறந்த கடமைகளைச் செய்யும் பொன்போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களே! எமது அம்பை விரைவிலே விடப்போகின்றோம்; ஆகையால் உங்கள் உயிருக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடிச் செல்லுங்கள். இவ்வாறு அறநெறியைக் கூறும் கொள்கையை உடையவன் நீ! சிறந்த வீரத்தையும் உடையவன் நீ. பகைவர்களைக் கொல்லும் யானையின் மீது பறந்துகொண்டிருக்கும் கொடி, வானத்திலே நிழலைச் செய்யும்படியான சிறப்புடைய எமது மன்னனே! குடுமி என்னும் பெயர் கொண்டவனே! நீ வாழ்க! ஆவும், ஆன்இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅதீரும் எம்அம்பு கடிவிடுதும், நும் அரண் சேர்மின், என அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்தின் |