| 218 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் எம்கோ! வாழிய குடுமி!’’ (பா. 9) இப்பாடல் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி என்பவனைக் குறித்த பாட்டு. இதைப் பாடிய புலவர் நெட்டிமையார் என்பவர். இதனால் பண்டைத் தமிழ் மன்னர்கள் கொடுமையான போரிலும் அறநெறியைக் குலைக்கவில்லை என்பதை அறியலாம். புலவர் பெருமை பண்டைத்தமிழ்ப் புலவர்கள் பெரும்பாலும் மன்னர்களின் ஆதரவால் வாழ்ந்தவர்கள்; பெருநிலக் கிழவர்களாகிய வள்ளல்களைப் பாடி, அவர்கள் வழங்கிய பொருள்களைக் கொண்டு வறுமைதீர்ந்து வாழ்ந்தார்கள். ஆயினும் அவர்கள் தங்கள் அறிவை, நேர்மையுள்ளத்தை யாருக்கும் அடகு வைத்துவிடவில்லை; உண்மையென்று கண்டதை உரைப்பதற்கு அஞ்சியதில்லை; தன்மானத்துடனேயே தங்கள் வாழ்வை நடத்தி வந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் பல புறநானூற்றிலேயுண்டு. ‘‘சிறந்த உயர்ந்த தந்தங்களையுடைய ஆண் யானைகள் கிடைப்பதாயிருந்தாலும் அன்பின்றிக் கிடைக்கும் அப்பரிசிலை வாங்கிக்கொள்ளமாட்டேன்; நீ மனமுவந்து-மகிழ்ச்சியோடு கொடுப்பாயானால் சிறிய குன்றிமணியளவுள்ள பொருளையும் பெற்றுக்கொள்வேன். கூர்மையான வேலையுடைய குமணனே. இவ்வுண்மையை நீ உணர்ந்துகொள். உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென், உவந்து நீ இன்புற விடுதியாயின், சிறிது குன்றியும் கொள்வல், கூர்வேல் குமண!’’ (பா. 159) |