பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்219

இது பெருஞ் சித்திரனார் என்பவர் குமணனைப் பற்றிப் பாடியுள்ள ஒரு பாடலின் பகுதி. இச் செய்யுளில் புலவர்களின் பெருமிதமும் தன்மான உணர்ச்சியும் ததும்பிக் கிடப்பதைக் காணலாம்.

மதுரைக் குமரனார் என்பவர் ஒரு புலவர். இவர் பெருந்திருமாவளவன் என்னும் சோழனிடம் பரிசு பெறச் சென்றார். அவன் இவரை உடனே வரவேற்றுப் பரிசில் தரவில்லை; சிறிது காலங் கடத்தினான். அதைப் பொறாத புலவர் அவன் முகத்தில் அறைந்ததுபோல் பாடினார்.

‘‘யாம் மிகப் பெரிய துன்பத்தையடைந்தாலும் சிறிதும் மதியற்றவர்களின் செல்வத்தை மதிக்கமாட்டோம். நல்லறிவாளர்களின் வறுமையையே வளமுடையதாக மதிப்போம்.

மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும். ’’                                                   (பா. 197)

இதுவே அந்த மதுரைக் குமரனார் பாடல்.

பெருந்தலைச் சாத்தனார் என்பவர் மற்றொருபுலவர். இவர் கடியநெடுவேட்டுவன் என்னும் குறுநில மன்னனிடம் பரிசில் வேண்டிச் சென்றார். அவன் காலங்கடத்தினான். உடனே புலவர், அவன் வெட்கித் தலைகுனியும்படி தன் பெருந்தன்மையைக் கூறிவிட்டுத் திரும்பினார்.

‘‘நிறைந்த செல்வமுடைய மூவேந்தர்களாட்டும், அவர்கள் எம்மிடம் அன்பில்லாமல்-மதிப்பில்லாமல் எவ்வளவு பொருளைக் கொடுத்தாலும் அதை நாம் ஏற்க மாட்டோம்.