| 220 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே’’ (பா. 205) இதுவே அந்தப் பெருந்தலைச் சாத்தனாரின் பாடல். இவ்வாறு தமிழ்ப் புலவர்களின் உயர்ந்த தன்மையைக் காட்டும் பாடல்கள் பல புறநானூற்றிலேயுண்டு. சமாதான முயற்சி நாட்டிலே அமைதி நிலவ வேண்டும் என்பதே அறிஞர்கள் விருப்பம்; அவர்கள் அமைதிக்காகவே பாடுபடுவார்கள். பழந்தமிழ்ப் புலவர்களிலே பலர், வறுமையிலே கிடந்து வாடினவர்கள்தாம். ஆயினும் அவர்கள், மன்னர்கள் சண்டை சச்சரவின்றி ஒன்றுபட்டு வாழ்வதற்குப் பாடுபட்டு வந்தனர். இந்த உண்மையை விளக்கும் பாடல்கள் இந்நூலிலே பலவுண்டு. பெருந்திருமாவளவன் என்னும் சோழனும், பெருவழுதி யென்னும் பாண்டியனும் ஒரு சமயத்தில் ஓரிடத்திலே ஒன்றாக வீற்றிருந்தனர்; ஒருவரோடு ஒருவர் அன்புடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். இக்காட்சியைக் காவிரிப்பூம் பட்டினத்துக்காரிக் கண்ணனார் என்னும் புலவர் கண்டார்; உள்ளத்திலே உவகையடைந்தார்; தன் மனத்திலெழுந்த மகிழ்ச்சியை அம்மன்னர்களிடமே கூறிவிட்டார். ‘‘நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். இன்றிருப்பதுபோல் என்றும் இணைந்து ஒன்று பட்டிருங்கள். நீங்கள் ஒன்றுபட்டிருந்தால் இந்த உலக முழுவதும் உங்கள் கையில்தானிருக்கும். இது உண்மை; பொய்யன்று. ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்! இரு வீரும் உடன்நிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பௌவம் உடுத்த இப்பயங்கெழு மாநிலம் கை அகப்படுவது பொய்யாகாதே’’ (பா. 58) |