பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்25

காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டு பாலைத் திணையைப்பற்றிய பாடல்கள்.

இவர் பாலை நிலத்து மக்களின் பண்பாடுகளை நன்றாக அறிந்தவர். பாலையைப் பற்றிப் பாடுவதிலே வல்லவர். இந்த ஐங்குறுநூற்றின் பாலைத்திணைப் பாடல்களே இவருடைய ஆற்றலை விளக்கும்.

ஐந்தாவது நூறு முல்லைத்திணை; இதைப் பாடிய புலவர் பேயனார் எனபவர். இவரும் கடைச் சங்கப் புலவர்களிலே ஒருவர்.

அக நானூற்றிலே ஒரு பாட்டு, குறுந்தொகையிலே நான்கு பாடல்கள் இவர் பெயரால் காணப்படுகின்றன. அந்த அகநானூற்றுப் பாட்டும், குறுந்தொகைப் பாடல்களிலே இரண்டும் முல்லைத் திணையைப் பற்றியவை ஆகையால் முல்லை நிலமக்களின் பழக்க வழக்கங்களை நன்றாக அறிந்தவர்; அந்நிலமக்களுடன் பழகியவர்; முல்லையைப் பாடுவதிலே வல்லவர் என்று அறியலாம்.

இவர் பெயர் பேயன், பேயார், பேயனார் என்று வழங்குகின்றது. பேயன் என்பது சிவபெருமானுக்குரிய பெயர்களில் ஒன்று. பேய்கள் வாழும் சுடுகாட்டில் இருப்பவன், பேய்களைப் படைகளாகக் கொண்டவன், ஆகையால் பேயன் என்று சிவனை அழைப்பர். இத்தகைய சிவபெருமான் பெயரையே இப்புலவரும் புனைந்திருந்தார் என்று கருதலாம்.

ஓரம்போகியார், அம் மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் இந்த ஐந்து புலவர்களின் பாடல்கள் அடங்கிய நூலே ஐங்குறுநூறாகும்.

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதிலே ஐங்குறுநூற்றுப் பாடல்கள் மிகவும் சிறந்தவை. ஒவ்வொரு நிலங்களின் இயற்கையைப் பற்றி அப் பாடல்கள் கூறுவதைக் காண்போம்.