26 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
மருதம் மருத நிலம் நீர்வளமும் நிலவளமும் உடையது. நீர்வளம் நிறைந்த ஊர்களும், ஊர்களைச் சார்ந்த இடங்களுமே மருதநிலம். ‘‘கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசிகளையும் பெரும் புனல்ஊர (பா. 65) கரும்பு நட்டுப் பயிர்செய்திருக்கின்ற பாத்தியிலே செழித்து வளர்ந்திருக்கின்ற அல்லி மலர்கள் வண்டுகளின் பசியைப் போக்குகின்றன; இத்தகைய நீர்வளம் பொருந்திய ஊரையுடையவனே’’ ‘‘கருங்கோட்டு எருமை செங்கண்பு னிற்றாக் காதல் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் (பா. 92) வலிமையான கொம்புகளையுடைய எருமை, சிவந்த கண்களையுடைய பசுவின் இளங்கன்றுக்குப் பால் ஊறுகின்ற தன் மடியை ஊட்டக் கொடுக்கும். ’’ ‘‘மருது உயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை (பா. 33) மருதமரங்கள் உயர்ந்து பருத்து வளர்ந்திருக்கின்ற - மலர்ந்த பூக்கள் வீழ்ந்துகிடக்கின்ற - பெரிய நீர்த்துறை’’. இவைகள் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகளை எடுத்துக் காட்டுகின்றன. அல்லி மலர்களிலே வண்டுகள் அமர்ந்து தேனுண்டு பசி நீங்கும். எருமை, பசுங் கன்றுக்குப் பாலூட்டும். மருத மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கின்றன. மலர்கள் சிந்திக் கிடக்கின்ற நீர்த்துறைகள் பல காணப்படுகின்றன. இவைகள் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள். |