நெய்தல் கடற்கரையும், கடற்கரையைச் சார்ந்த நிலமும் நெய்தல் நிலமாகும். ‘‘புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழுதுறை (பா. 110) புன்னை மரங்கள் பொன்னிறமுடைய மலர்களைப் பூத்திருக்கின்ற ஒளி நிறைந்த கடல் துறை” ‘‘எக்கர்ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும் துறை (பா. 144) மணல் மேட்டிலே, சுரபுன்னையின் மலர்கள் வீழ்ந்து கிடக்கும் புதரிலே, தனியாக நாரை உட்கார்ந்து உறங்குகின்றது. இத்தகைய நீர்த்துறை”. ‘‘பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணம் துறை (பா. 164) பெரிய கடற்கரையிலே வாழ்வதாகிய சிறிய வெண்காக்கை, நீண்ட உப்பங்கழியின் பக்கத்திலே உட்கார்ந்து அயிரை மீனைப் பிடித்துத் தின்னும். இத்தகைய குளிர்ந்த அழகிய கடல்துறை”. இப்பாடல்கள் நெய்தல் நிலத்தின் இயற்கைத் தோற்றத்தைக் காட்டுகின்றன. குறிஞ்சி மலையும் மலைச்சாரலும் குறிஞ்சி நிலமாகும். ‘‘குன்றக் குறவன்புல் வேய்குரம்பை மன்றாடு இளமழை மறைக்கும் (பா. 252) மலையிலே வாழ்கின்ற குறவனுடைய புல்வேய்ந்த சிறிய குடிசையை, வானத்திலே எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கின்ற மேகங்கள் மறைக்கும்’’. |