‘‘கணமா தொலைச்சித் தன்ஐயர் தந்த நிணவூண் வல்சிப் படுபுள் ஒப்பும் நலமாண் எயிற்றி (பா. 365) கூட்டமான விலங்குகளை அழித்துத் தன் தந்தையர் கொண்டு வந்த மாமிசத்தையும், மூங்கில் அரிசியையும் கவரவருகின்ற பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கின்ற நல்ல அழகுடைய எயிற்றி.” இவைகள் பாலைநிலத்தின் தோற்றத்தையும், அங்குள்ள மக்களின் தொழில்களையும் காட்டுகின்றன. முல்லை காடும் காட்டைச் சேர்ந்த நிலமும் முல்லைநிலமாகும். காட்டுப்புறங்களிலே மழை வளம் குறையாது. ‘‘காயா, கொன்றை, நெய்தல், முல்லை, போதவிழ் தளவமொடு, பிடவு, அலர்ந்து கவினிப் பூ வணிகொண் டன்றால் புறவே. (பா. 412) காசாம்பூ, கொன்றைப்பூ, நெய்தற்பூ, முல்லைப்பூ, இதழ் விரிந்த மல்லிகைப்பூ, பிடவம்பூ இவைகளெல்லாம் மலர்ந்து அழகு பெற்றதனால், பூவை அணிந்து கொண்டு விளங்குகிறது காடு”. ‘‘குருந்தம் கண்ணிக் கோவலர் பெருந் தண்நிலைய பாக்கமும் உடைத்தே (பா. 439) குருந்த மலர்மாலையைப் பூண்ட இடையர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழும் பாக்கம் என்னும் ஊரும் அந்த முல்லை நிலத்திலே உண்டு”. ‘‘அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும் வெம்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண் கார் தொடங் கின்றால் (பா. 453) |