பேரோசையுடன் முழங்கிக் கொண்டிருக்கின்ற-தேரினையும் வண்மையையும் உடைய பாண்டிய மன்னனது தேனூர்’’. ‘‘ஆம்பல் அம் செறுவின் தேனூர் (பா. 58) அல்லிகள் மலர்ந்திருக்கின்ற அழகிய வயல்களையுடைய தேனூர். ‘‘ இவ்வாறு தேனூரின் சிறப்பும், வளமும் கூறப்படுகின்றன. இன்று மதுரை மாவட்டத்தில் இது ஒரு சிற்றூர். ‘‘பகல் கொள் விளக்கோடு இராநாள் அறியா வெல் போர்ச் சோழர் ஆமூர் (பா. 56) கதிரவன் தன்மையைக் கொண்டிருக்கின்ற விளக்குகளுடன் - இரவுப் பொழுது என்பதையே அறிய முடியாத-போரிலே வெற்றியையுடைய சோழர்களது ஆமூர்’’. இது ஆமூரின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. ‘‘கைவண் விரான் இருப்பை (பா. 58) வள்ளலாகிய விரான் என்பவனுடைய இருப்பை. ‘‘ இது விரான் என்பவன் வாழ்ந்த இருப்பை என்னும் ஊரைக் குறிப்பிடுகின்றது. ‘‘நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் (பா. 61) நல்ல மாமரத்திலே பழுத்து முதிர்ந்த இனிய பழம் ஆழமான நீர் நிறைந்த குளத்திலே திடீர் என்று விழுகின்ற சோலையும், நீர்வளமும் பொருந்திய-வள்ளலாகிய மத்தியென்பவனுடைய-கழார் என்னும் ஊர்’’. இது மத்தியென்னும் வள்ளல் வாழ்ந்த கழார் என்னும் ஊரைக் குறிப்பிடுகின்றது. மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம் போகியார், இவ்வாறு தேனூர், ஆமூர், இருப்பை, கழார் என்னும் ஊர்களைக் குறிப்பிட்டுள்ளார். |