40 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
‘‘திரையிமிழ் இன்னிசை அளைஇ, அயலது முழவிமிழ் இன்னிசை மறுகுதொறும் இசைக்கும் தொண்டி. (பா. 171) அலையிலிருந்து பிறக்கும் இனிய ஓசையுடன் கலந்து, அதன் பக்கத்திலேயே, மத்தளத்திலிருந்து பிறந்த இனிய ஓசை, வீதிகள் தோறும் முழங்கிக்கொண்டிருக்கும் தொண்டி நகர்’’. ‘‘செங்கோல் செங்குட்டுவன் தொண்டி (பா. 178) நேர்மையுடன் அரசாளும் செங்குட்டுவனுடைய தொண்டி நகரம்’’. சேரமன்னர்களின் துறைமுக நகரமாகிய தொண்டியின் சிறப்பை இப்பாடல்களால் காணலாம். நெய்தல் திணையில் ‘‘தொண்டிப்பத்து’’ என்ற பெயரில் பத்துப்பாடல்கள் அமைந்திருப்பதும் குறப்பிடத்தக்கது. ‘‘அலங்கிதழ் நெய்தற் கொற்கை முன்துறை இலங்கு முத்து (பா. 185) அசைகின்ற இதழ்களையுடைய நெய்தல் மலர்கள் நிறைந்த கொற்கையின் கடல்துறையிலே விளங்குகின்ற முத்துக்கள்’’. இது, கொற்கையின் சிறப்பையும், பாண்டிய நாட்டின் செல்வத்தையும் விளக்குகின்றது. இவ்வாறு நெய்தல் திணையைப்பற்றிப் பாடியிருக்கும் அம்மூவனார் சேரர்களின் தொண்டியையும், பாண்டியர்களின் கொற்கையையும் பாராட்டிப் பாடியிருக்கின்றார். ‘‘அரும் தொழில் தகட்டூர் (பா. 445) சிறந்த தொழில்கள் நடைபெறுகின்ற தகட்டூர்’’. இது, முல்லைத் திணையைப் பாடிய பேயனார் பாடியது. இவர் காலத்திலே தகட்டூர் என்பது பல தொழில்கள் நடைபெற்ற பெரிய நகரமாக இருந்தது என்பதைக் காணலாம். |