அந்தணர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திலே அந்தணர் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேத நெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர்: நாட்டின் நன்மையைக் கருதி எப்பொழுதும் வேதம் ஓதுவார்கள். ‘‘பகைவர் புல்லார்க பார்ப்பார் ஓதுக. (பா. 4) பகைவர்கள் மாண்டவிடம் புல் முளைத்துப்போக! பார்ப்பார் வேதங்களை ஓதுக’’. ‘‘அறம்புரி அருமறை நவின்ற நாவின் திறம்புரி கொள்கை அந்தணிர் (பா. 387) அறம்புரியும் வழிகளைக் கூறுகின்ற, சிறந்த வேதங்களைச் சொலலிக் கொண்டிருக்கின்ற நாவினையும், நூல்களிற் கூறப்படும் நல்லொழுக்கங்களைப் பின்பற்றும் கொள்கையையும் உடைய அந்தணர்களே’’. இவற்றால் அக்காலத்திலிருந்த அந்தணர்களின் சிறப்பையும் செயலையும் காணலாம். பழக்க வழக்கங்கள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை ஐங்குறுநூற்றுப் பாடல்களிலே காணலாம். பாலைவனத்திலே மறவர்களின் அம்பால் மாண்டவர்களுக்கு, அவர்கள் பெயர் பொறித்த கல்லை நினைவுக்குறியாக நட்டு வைப்பார்கள். ‘‘விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகல் (பா. 352) குறிதவறாமல் அம்புவிடும் மறவர்களின் வில்லம்பால் அடிபட்டு மாண்டவர்களின் பெயர் பொறித்த நடுகல்’’. |