பக்கம் எண் :

42எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

பண்டைக்காலத்தில் பொற் சங்கிலியால் யானையைக் கட்டி வைத்திருக்கும் அவ்வளவு பெருநிதி படைத்தவர்களும் தமிழ் நாட்டிலிருந்தனர்.

‘‘செல்வர், யானை பிணித்த பொன்புனை கயிற்றின்                   (பா. 356)

செல்வர்கள் யானையைக் கட்டியிருக்கின்ற பொன்னாற் செய்யப்பட்ட கயிற்றைப்போல்’’.

கற்புக்கு அருந்ததியையே உவமையாகக் கூறி வந்தனர்.

‘‘இருண்டுதோன்றும் விசும்பின் உயர்நிலை உலகத்து
அருந்ததி யனையகற்பின்                                        (பா. 442)

இருண்டு காணப்படும் வானத்திலே எல்லோரும் காண வாழும் அருந்ததியைப் போன்ற கற்பினையுடையவள். ’’

பண்டைக்காலத்திலே பார்ப்பனர்கள் குடுமி வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டுச் சிறுவர்களுக்கும் குடுமிதான் வைத்திருப்பார்கள்.

‘‘நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்தமாவே                                  (பா. 202)

நம்மூரிலே உள்ள பார்ப்பனப் பிள்ளையைப் போல நம்முடைய தலைவனாகிய மலைநாடன் ஏறிவரும் குதிரையும் குடமித்தலையை உடையதாகக் காணப்படுகிறது’’.

சிறிய பாடல்களால் ஆன இந்த ஐங்குறுநூற்றிலே இவைபோன்ற பல பழக்க வழக்கங்களையும் காணலாம். அரிய சொல் நயமும், பொருள் சிறப்பும் வாய்ந்தவை இந்நூற் பாடல்கள். இந்நூலைப் படிப்போர் இவ்வுண்மையை அறிவார்கள்.