3. குறுந்தொகை வரலாறு குறுகிய பாடல்களின் தொகுப்பு குறுந்தொகை. நாலடி முதல் எட்டடி வரையில் உள்ள பாடல்களே இந்நூலில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. குறுந்தொகையிலே காணப்படும் பாடல்கள் நானூற்றிரண்டு. ஒன்று கடவுள் வாழ்த்துப் பாடல். கடவுள் வாழ்த்துப் பாடல் பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்டது. இந்நூலில் உள்ள எல்லாப் பாடல்களும் இருநூற்றைந்து புலவர்களால் பாடப்பட்டவை. இவற்றுள் ஆசிரியர்கள் பெயர் காணாப் பாடல்கள் பத்து. ஒவ்வொரு பாடலின் கீழும் அதைப் பாடிய ஆசிரியர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் இறுதியிலே ‘‘இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிஞர் இருநூற்றைவர், இத்தொகை நாலடி சிற்றெல்லையாகவும், எட்டடி பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது’’ என்ற குறிப்பு காணப்படுகின்றது. இதனால் இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்று தெரிகின்றது. இவரைப்பற்றிய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. கோ என்பதனால் இவர் ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். |