44 | எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் |
இது அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணை யொழுக்கம் பற்றிய பாடல்களே தொகுக்கப்பட்டிருக்கின்றன. எந்த முறையும வரிசையும் இன்றி எல்லாத் துறைப் பாடல்களும் கலந்து கிடக்கின்றன. குறுந்தொகையின் சிறப்பு குறுந்தொகையின் பாடல்கள் மிகச் சிறந்தவை. சிறிய பாடல்களாயினும் அரிய செய்திகள் நிறைந்தவை. இதற்கு இந்நூலின் இரண்டாவது பாடலே ஓர் எடுத்துக்காட்டு. ‘‘கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி! காமம் செப்பாது கண்டது மொழிமோ! பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல் செறிஎயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே மலர்களிலே உள்ள தேனைத் தேடிக் குடிக்கும் வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையும் உடைய வண்டே! அன்பு காரணமாக ஒரு பக்கமாகப் பேசாமல் கண்ணாற் கண்டதையே உண்மையாகச் சொல்! நெருங்கிய நட்பு-மயில் போன்ற தோற்றம்-நெருங்கிய வெண்மையான பற்கள்-இவைகளைக் கொண்ட இந்த மாதரசியின் கூந்தலைக் காட்டினும் நீ அறிந்த மலர்களில் நறுமணமுடையது வேறு ஏதேனும் உண்டோ?’’ இதுவே அப்பாடலின் பொருள். இது இரண்டாவது பாட்டு. இதைப் பாடிய புலவர் இறையனார் என்பவர். இது ஒரு காதலன் தன் காதலியைப் பாராட்டிச் சொல்லியது; தன் காதலியின் தலைமயிரைக் காட்டினும் நறுமணமுடையது வேறு ஒன்றுமில்லையென்று உரைத்தது. நலம் பாராட்டல் என்னும் பகுதியைச் சேர்ந்தது இப்பாடல். |