பக்கம் எண் :

46எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

உண்டென்றார். அதை மறுத்தார் நக்கீரர். அப்பொழுது சொக்கநாதர் தன் நெற்றிக் கண்ணைக் காட்டினார். அதற்கும் நக்கீரர் அஞ்சவில்லை. ‘‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’’ என்று வாதிட்டார்.

உடனே சிவபெருமான் சினங்கொண்டார். நக்கீரரைப் பொற்றாமரையிலே விழச் செய்தார். அதன் பிறகு அவர் சொக்கநாதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இவ் வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்திலே காணலாம். இப்பாடலே இக்கதைக்கு ஆதாரம். ‘‘நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றந்தான்’’ என்று வழங்கும் பழமொழிக்கு இந்தக் குறுந்தொகைப் பாட்டே அடிப்படை.

‘‘கற்புடை மகளிரின் கூந்தல் இயற்கை மணமுடையது’’ என்ற கருத்து இப்பாடலில் காணப்படவில்லை. இந்த விவாதத்திற்கான பொருளும் இப்பாடலில் இல்லை. இப்பாடலின் சிறப்பு நோக்கியே இத்தகைய கதை எழுந்தது என்றுதான் கொள்ளவேண்டும். இக்கதையும் இப்பாடலும் குறுந்தொகைப் பாடல்களின் பெருமையை விளக்குவன.

இல்லறம்

சங்க நூல்கள் எல்லாம் இல்லற வாழ்க்கையைத்தான் ஏற்றமுடையதாகக் கூறுகின்றன. அகப் பொருள் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இல்லறத்தைப் பாராட்டிக் கூறுவனவே. நாட்டிலே நல்ல அமைதியும் அரசியலும் இருந்தால்தான் ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ முடியும். பண்டைத் தமிழர்கள் தனித்தனிக் குடும்பமாகச் சிறந்து வாழ்ந்து வந்தனர்.

‘‘இல்வாழ்க்கையைத் திறமையுடன் நடத்த வேண்டிய முறைப்படி நடத்தினால் அதைக் காட்டினும் இனிய வாழ்வு வேறு உண்டோ?