மனையுறை வாழ்க்கை வல்லியாங்கு மருவின் இனியவும் உளவோ’’ (பா. 322) என்ற அடிகள் இவ்வுண்மையைக் காட்டும். இக் கருத்தே ‘‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன்’’ என்று திருக்குறளிலே அமைந்து கிடப்பதைக் காணலாம். இந்த இல்லறம் சிறப்பாக நடைபெற வேண்டுமானால் காதலனும் காதலியும் கருத்தொருமித்தவர்களாக வாழ வேண்டும். இத் தம்பதிகள்தாம் இல்லறத்திலே இன்பங் காண்பர். இதுவே பழந்தமிழர் கருத்து. ‘‘தொழில் செய்து பொருளீட்டும் காதலனுக்கு, காதலிதான் வாழ்க்கையிலே உற்சாகமூட்டும் உயிர்; இதைப்போலவே இல்லத்திலே இருந்து கடமையைச் செய்யும் காதலிக்கு, காதலனே இன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஊட்டும் உயிர். நமது காதலர்தான் இவ்வுண்மையை நமக்குரைத்தார். ஆதலால் தோழியே நீ வருந்தாதே! அவர் இப்பொழுது பிரிந்து செல்லமாட்டார். அவராகவே தம் பிரயாணத்தை நிறுத்தி விடுவார். வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்; மனைஉறை மகளிர்க்கு ஆடவர் உயிர்; என நமக்குரைத் தோரும் தாமே அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே’’ (பா. 135) கணவன் பொருள்தேடப் பிரிந்து செல்வான் என்று எண்ணிய தலைவிக்கு, அவள் தோழி இவ்வாறு சமாதானம் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல். இல்லறத்தில் உள்ள தம்பதிகள் ஒருமனப்பட்டு வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடல் உதாரணம். உண்மைக் காதலி உண்மையான மனைவி கணவன் செய்யும் சிறுபிழைகளுக் கெல்லாம் கடுங்கோபங் கொள்ள மாட்டாள். |