பக்கம் எண் :

48எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

கணவன் செய்வது நன்மையாயினும், தீமையாயினும் அவைகளைப் பொறுத்துக் கொள்ளுவாள். காதலன் செய்யும் நன்மையைக் கண்டு மகி்ழ்வாள். தீமையைக் கண்டு பொறுமையிழக்காமல் அவனைத் திருத்த முயல்வாள். இதுவே ஒரு நல்ல மனைவியின் கடமை.

சங்க இலக்கிய காலத்தில், பெண்ணுக்கு உரிமையில்லை. ‘‘கணவனுக்குக் கட்டுப்பட்டவள்தான் மனைவி. கணவன் கொடுமைப்படுத்தினாலும் அவனுடன் கூடியிருந்துதான் அவள் வாழவேண்டும். இவளே உண்மையான மனைவி’’ என்ற கொள்கைதான் குடிகொண்டிருந்தது.

‘‘நெய்தல்நிலத் தலைவனே! தாய், கோபத்துடன் அடிக்கும் போது கூடக் குழந்தைக்கு வேறு வார்த்தை சொல்லத் தெரியாது. அம்மா! அம்மா! என்று சொல்லித்தான் அழும். அதைப்போல நீ துன்பம் செய்தாலும் சரி, அல்லது நன்மை செய்தாலும் சரி, உன்னுடைய பாதுகாப்பாகிய எல்லைக்குள் அடங்கினவள்தான் என் தோழியாகிய உன் மனைவி. ஏனென்றால் குழந்தையின் துயரைப் போக்குகிறவள் தாயைத் தவிர வேறில்லை. அதுபோல என் தோழியின் துயரைப் போக்குகிறவர் உன்னைத் தவிர வேறில்லை. நீ ஒருவனே அவளுக்குத் துணை.

உரவு நீர்ச்சேர்ப்ப!
தாய்உடன்று அலைக்குங்காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவிபோல,
இன்னா செயினும், இனிது தலை அளிப்பினும்,
நின்வரைப் பினள் என்தோழி;
தன்உறு விழுமம் களைஞரோ இலளே. ’’                             (பா. 397)

ஒரு தோழி தன் தலைவியைப் பற்றித் தலைவனிடம் கூறுவதுபோலப் பாடப்பட்டது இப்பாடல். இதனால் அக்காலத்துக் கணவன் மனைவியின் தொடர்பைக் காணலாம்.