சந்திக்கின்றனர். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்புகொண்டு காதலனும் காதலியுமாக ஆகிவிடுகின்றனர். இச்சமயத்தில் காதலன் தன்னைக் கைவிட்டுவிடுவானோ என்று கருதிக் கவலையடைகின்றாள் காதலி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்தான் காதலன். உடனே அவளுடைய மனக்கவலை மறையும்படி ஆறுதலும் உறுதி மொழியும் கூறுகின்றான். ‘‘என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் எத்தகைய சம்பந்தமுடையவரோ யாம் அறியோம். என்னுடைய தந்தையும், உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவுடையவர்களோ இதையும் நாம் அறியோம். நானும் நீயும் இதற்குமுன் எவ்விடத்திலே சந்தித்திருக்கின்றோம்? ஓரிடத்திலும் சந்தித்ததில்லை. அப்படியிருந்தும் செம்மையான நல்ல நிலத்திலே பெய்த மழை நீர் போல அன்புடைய நமது நெஞ்சம் இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்டன. ஆகையால் நமக்குள். இனிப் பிரிவு ஏற்படும் என்று அஞ்சாதே. யாயும் ஞாயும் யார் ஆகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’’ (பா. 40) இது சாதிபேதமற்ற காதல் மணம் நடைபெற்ற செய்தியைக் குறிக்கும் பாடல். காதலர்களின் பெற்றோர்கள் இருவரும் ஒரு குலத்தினர் அல்லர்: எத்தகைய உறவினருமல்லர். காதலன், காதலி இருவரும் அதற்குமுன் ஒருவரையொருவர் கண்டவர்களும் அல்லர். அப்படியிருந்தும் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது: களவு மணம் புரிந்துகொண்டனர். இதையே தெய்வீகக் காதல் என்பர். |