பக்கம் எண் :

54எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

காதலர் உறுதி

இவ்வாறு மணம்புரிந்து கொண்ட காதலர்கள் என்றும் பிரியாமல் இணைந்திருந்து இல்லறம் நடத்துவர். எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் பிரியமாட்டார்கள். இத்தகைய உறுதி ஆண், பெண் இருவரிடமும் இருந்தது.

‘‘நிலத்தைக் காட்டிலும் பெரியது; வானத்தைக் காட்டிலும் பரந்தது; கடலைக்காட்டிலும் பெரிய அளவுடையது; மலைச்சாரலிலே வலிமையான கிளைகளையுடைய குறிஞ்சியின் மலர்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்ற மலை நாட்டையுடைய தலைவனிடம் நான் கொண்டிருக்கும் நட்பு அத்தகையது’’ இவ்வாறு காதல் மணம்புரிந்து கொண்ட ஒருத்தி சொல்லுவதாக அமைந்திருக்கின்றது ஒரு பாடல்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடுநட்பே’                           (பா. 3)

இதுவே காதலியின் உறுதியுள்ளத்தை உணர்த்தும் அப்பாடல்.

வெற்றியில் மகிழ்ச்சி

செய்யத் தொடங்கிய செயல் சிறியதாயினும் சரி, பெரியதாயினும் சரி, அதில் வெற்றி பெற வேண்டுமென்றே எல்லோரும் விரும்புவர். வெற்றியடைந்தால் மகிழ்ச்சி; தோல்வியடைந்தால் துக்கம். இதுவே மக்களின் இயற்கை.

‘‘உழைப்பது மக்கள் கடமை; பலனைப் பற்றிக் கவலைப்படக் கூடாது’’ என்று சொல்வோர் உளர். இது வெறும் வாய் வேதாந்தம். வயிற்றுப்பசி ஒன்றைத் தவிர வேறு உணர்ச்சியே யில்லாத மனித உருப் படைத்தவர்கள்